உன்னோடு


பார்க்க.. பேச.. அழ.. சிரிக்க..
சண்டையிட.. முத்தமிட..

கோபப்பட.. அணைக்க.. தவிக்க..
தேட.. வாட.. கூட.. பிரிய..

காத்திருக்க.. நோக..
ரசிக்க.. ருசிக்க.. பகிர.. சாய..

ஏங்க.. தூங்க.. நெருங்க.. விலக..
கனவு காண.. தலை கோத.. கை கோர்க்க..
எதிர்பார்க்க.. இம்சிக்க.. சகிக்க.. சுகிக்க..

காதலிக்க.. வாழ..
ஏன் சாகக் கூட சுகமாய்தான் இருக்கிறது
உன்னோடு மட்டும்……….

கற்பனை


எத்தனையோ பேர் வந்து போகையிலும்
தங்கிப்போகையிலும்
அமைதியாய் இருந்த என் இல்லம்…

நான் தனிமையில் இருக்கையில் மட்டும்
என்றோ நீ என்னுடன் இருந்த
என்னருகில் அமர்ந்த
காட்சிகளை எல்லாம்
கண்முன்னே அரங்கேற்றுகிறது !

என் அறைகள் முழுவதும்
நிறையும் உன் வாசத்தை
நினைவுகளில் சுமந்தபடியே
அமர்ந்திருக்கிறேன்
அசைவுகள் ஏதுமின்றி !

அடிக்கடி எனக்கு மட்டும்
கேட்கின்ற உன் சிரிப்பு சத்தங்களும்
நீ அன்போடு என்னை அழைக்கும் அந்த சத்தமும்
இப்பொழுதெல்லாம் எனக்கு பழகிவிட்டது !

ஒருவேளை நீ நிஜத்தில்
என் முன் வந்து நின்றாலும்
பேசினாலும்கூட
இதுவும் கற்பனை என்று
நான் உன்னை கடந்துபோகக்கூடும்
எச்சரிக்கையாய் இரு…

"நாட்கள்"


கடிகார முள்ளைப்போல்
ஒரு நொடிகூட நில்லாமல்
உன்னை எண்ணியே ஓடிக்கொண்டிருக்கும்
என் நினைவுக் குதிரைக்கு
பாசக் கடிவாளமிட்டு
அதன்மேல் ஒய்யாரமாய்
பயணம் செய்கிறாய்…

பள்ளத்தில் பாயும்
நதியின் சலசலப்பைப்போல்
ஓயாமல் எப்போதும்
எதையாவது பேசிக்கொண்டிருக்கும் நீ…

சட்டென சிலநாள்
பாசி படிந்த குளம்போல்
மௌனித்திடும் பொழுது
மரண பயம்கொண்டு
ஸ்தம்பித்து போகின்றன என் நாட்கள்…

புதிதாய் பொம்மை கிடைத்த மகிழ்ச்சியில்
அதோடு ரசித்து ரசித்து விளையாடி
பின் மெல்ல மெல்ல ஆர்வம் குறைந்து
அதை ஓரமாய் வைத்துவிட்டு ஓடிப்போகும்
குழந்தையின் மனநிலையில்
ஒருவேளை விழுந்துவிட்டாயோ என நான்
அறிய முற்படுகையில்…

முரட்டு வார்த்தைகளால்
என்னை முறித்துப் போடுகிறாய்…

உன் சின்ன சின்ன வரிகள்
என்னை சீக்கிரம்
சாகடிக்கத் தொடங்கும் முன்…

வானமளவு நிறைந்து
பூமியையே பகிர்ந்து
பூக்களைப்போல் திறந்து
மற்றதெல்லாம் மறந்து
நாம் பேசிய பழகிய நாட்களில்
உனக்கு தெரியவில்லையா…

நான் வார்த்தைகளில் வாழ்பவன என்று…

ஞாபகங்கள்


ரம்மியமாய் வந்து
ராட்சச அலையென
என்னை இழுத்துச் செல்லும்
உன் ஞாபகங்கள்
கொண்டு போய் சேர்க்கின்றன
அடர்ந்த மௌனத்தின் தீவில்…

அதன் கரையோரங்களில் எல்லாம்
மணலாய் கொட்டிக் கிடக்கின்றன
உன் குட்டிப் புன்னகைகள்…

மரங்களாய் வளர்ந்து நிற்கின்றன
என்மீதான உன் அக்கறைகள்…

அங்கு தனியே நானிருந்தாலும்
தனிமையாய் இல்லை…

அருகாமையோ
தீண்டல்களோ
பகிர்தல்களோ
இல்லாவிடினும்…

எனக்கு துணையாய்
எப்போதும் என்னைச் சுற்றி
பறந்துகொண்டே இருக்கின்றன
உன் ஸ்பரிசப் பறவைகள்…

ஒருநாள் காலம்
உன்னையும் இந்த தீவில்
கொண்டு வந்து தள்ளும்
என்ற எதிர்பார்ப்போடு…

மகிழ்ச்சியுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
நமக்கான மௌனத்தின் தீவில்…

Followers